Advertisement

Responsive Advertisement

“விவாதங்கள் இல்லாமல் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்தது ஏன்?”-எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பி பெறுவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், விவாதத்துக்கு வாய்ப்பே அளிக்காமல் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. விவாதமின்றி சர்ச்சைக்குரிய சட்டங்களை அரசு ரத்து செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முதலில் மக்களவை மற்றும் பின்னர் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு கடும் எதிர்ப்புக்கிடையே திங்கட்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மீது விவாதம் நடைபெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விவாதம் வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

சட்டங்களை ரத்து செய்வதற்கு விவாதங்கள் தேவையில்லை என மசோதாவை தாக்கல் செய்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர குமார் பதில் வாதம் வைத்தார். அனைத்து தரப்பினரும் இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கருதும் நிலையில் விவாதத்துக்கு அவசியம் இல்லை என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில், விவாதம் நடத்துவதற்கான சூழல் இல்லை என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே குரல் வாக்கெடுப்பு என அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குழப்பத்துக்கு இடையே மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் அவையின் ஒப்புதலைப் பெற்றது என சபாநாயகர் அறிவித்தார்.

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விவாதம் தேவை என வலியுறுத்தி பேசிய நிலையில், மக்களவையில் நடந்ததைப் போலவே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா ஒப்புதல் பெற்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகளிடம் அரசு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் எதிர் கட்சியினர் வலியுறுத்தினர். இதனால்தான் விவாதம் தேவை என நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களை ரத்து செய்ய ஒரு வருடம் ஆனது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அரசியல் காரணங்களுக்காக சட்டங்கள் கைவிடப்படுகின்றன எனவும் அவர் வலியுறுத்தினார். குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் லக்கிம்பூர் கேரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு இதற்கான மசோதாவுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதலை ஒரே நாளில் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என கருதப்படுகிறது. விரைவிலேயே குடியரசுத் தலைவர் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான இறுதி ஆணைகளுக்கு ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள் காரணமாக பலமுறை ஒத்துழைப்பு நடைபெற்றது. இதைத் தவிர காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், மோதல் போக்கு இந்தக் கூட்டத்தொடரில் தொடரும் என கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா? - மருத்துவ நிபுணர்கள் சொல்வதென்ன? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xz39w1
via Read tamil news blog

Post a Comment

0 Comments