Advertisement

Responsive Advertisement

'மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்குக!' - மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கோரிக்கை

நாடு முழுவதும் நான்கு இடங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய யோசனைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முன் வைத்த நிலையில், அதனை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் சாசன தினம் கொண்டாட்டங்கள் உச்சநீதிமன்றத்தின் சார்பாக இரண்டு தினங்களாக நடைபெற்று வரக்கூடிய நிலையில், இன்று இரண்டாம் நாள் கொண்டாட்டத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், ''4 மேல்முறையீட்டு நீதிமன்றங்களை நாட்டின் நாலு இடங்களில் உருவாக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வேலை பளுவை குறைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் அடிப்படை கட்டமைப்புகளை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்'' உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளையும் யோசனைகளையும் முன்வைத்திருந்தார்.

கே.கே.வேணுகோபால்

இது தொடர்பாக இன்று நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ''இது மிகவும் முக்கியமான விஷயம். இது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய நீதித்துறையின் கட்டமைப்பு படி நிலைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக மிக தீர்க்கமான ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று பேசினார்.

நீதித்துறைக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 9000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜு குறிப்பிட்ட நிலையில், "பணம் என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல. மாறாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பொதுவான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அனைத்து நீதிமன்றங்களும் சம அளவில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை பெற இயலும்" என தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். எத்தனை விமர்சனங்கள் எங்கள் மீது வைக்கப்பட்டாலும் நீதித்துறையை வலுப்படுத்தும் எங்கள் பணி தொடரும் எனவும் தலைமை நீதிபதி பேசினார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DZ2cQa
via Read tamil news blog

Post a Comment

0 Comments