Advertisement

Responsive Advertisement

உத்தராகண்ட்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக ஹரீஷ் ராவத் அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல்

உத்தராகண்ட் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவிவந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க முடியாதது என்றால் அது அக்கட்சியில் எப்பொழுதுமே நிலவக்கூடிய உட்கட்சி பூசல். அதுவும் தேர்தல் சமயங்களில் அந்த உட்கட்சி பூசல் தடாலடியாக வெளிப்படும். இதற்கு கர்நாடகத்தில் டி.கே.சிவகுமார் விவகாரம், புதுச்சேரியில் நாராயணசாமி, நமச்சிவாயம் விவகாரம் உள்ளிட்டவை எல்லாம் சமீபத்திய உதாரணங்கள்.

image

அதே வரிசையில் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் அக்கட்சிக்குள் எழுந்திருக்கும் உட்கட்சி பூசல், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சமீபத்தில் பஞ்சாப் காங்கிரஸில் இதேபோன்று ஏற்பட்ட உட்கட்சி பூசலால் முக்கிய தலைவரும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரிந்தர் சிங் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்கி காங்கிரசுக்கு எதிராகவே காய்களை நகர்த்திவரும் நிலையில், அந்த தலைவலிக்கு மத்தியில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது உத்தராகண்ட் விவகாரம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் தனித்து விடப்பட்டதாக உணர்வதாக கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதேபோல் தான் உணர்வதாகவும் தனது பிரச்னைகளை கட்சியின் தலைமை தீர்த்து வைக்கும் என நம்புவதாகவும் உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் வெளிப்படையாக ஊடகங்களில் பேசி இருந்தது மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

image

இவை அனைத்திற்கும் தொடக்கப்புள்ளி உத்தராகண்ட் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளரான தேவேந்திர யாதவ், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான முடிவையும் அறிவிக்காதது தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என ஹரிஷ் ராவத் நினைக்க, அதற்கு எதிர்கோஷ்டி எதிர்ப்பு தெரிவிக்க பிரச்னை தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தியை ஹரிஷ் ராவத் இன்று டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தியே நேரடியாக அழைத்ததன் பேரில்தான் ஹரிஷ் ராவத் டெல்லி வந்து சந்தித்துள்ளார். பிறகு கருத்துக்கூறிய அவர், தொடர்ந்து முன்னேற வேண்டும்; எனது வாழ்க்கை உத்தராகண்ட் மாநிலத்திற்கானது. காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று சிரித்த முகத்துடன் கூறியதுடன் உத்தராகண்ட் தேர்தல் பரப்புரை தன்னை முன்னிலைப்படுத்தி நடைபெறுமென உற்சாகத்துடன் கூறினார்.

image

இதனையடுத்து உத்தராகண்ட் மாநிலத்தில் நிலவிய இந்த உட்கட்சி பூசல் சற்று அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எதிர்த்தரப்பினர் வேறு ஏதேனும் புயலை கிளப்புவார்கள் என்ற சந்தேகமும் இருக்கக்கூடிய நிலையில், பிற மாநிலங்களை போலவே உத்தராகண்டில் சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ் கட்சி.

- நிரஞ்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3JcdWlv
via Read tamil news blog

Post a Comment

0 Comments