Advertisement

Responsive Advertisement

"ராமர் கோயில் நிலத்தில் பாஜக மாபெரும் ஊழல் செய்துள்ளது”- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆளும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதில் தற்பொழுது முக்கிய விவாத பொருளாக மாறியிருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முன்வைத்துள்ள சில குற்றச்சாட்டுகள்.

குறிப்பாக “அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு அருகே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் அரசு அதிகாரிகளும் நிலங்களை வாங்கி குவித்து வருகின்றது. இதன் பின்னணியில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் கூறியிருப்பது, உத்தர பிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

பிரியங்கா காந்தி இதுகுறித்து பேசுகையில், “கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. அதில் முதல் பகுதி ராமர் கோயில் நிர்வாகத்திடம் 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அது விற்கப்பட்டு சரியாக 19 நிமிடங்கள் கழித்து, இரண்டாவது பகுதி ரவி மோகன் திவாரி என்பவருக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பின்னர் சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து அதே நபர் 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை சுமார் 18.5 கோடி ரூபாய்க்கு ராமர் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார். ஒரே மதிப்புள்ள நிலம் எப்படி இவ்வளவு பெரிய தொகை வித்தியாசத்தில், மிகக்குறுகிய நேரத்தில் விற்கப்படுகிறது?

இது வெறும் ஒரு உதாரணம்தான். இதுபோல அயோத்தியா பகுதியில் ஏராளமான குளறுபடிகளுடன் நிலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை நேரடியாக செய்வது, பாஜகவின் மூத்த தலைவர்களும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் தான். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்” என நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

இவற்றுடன், இந்த ஆட்சியில் பொதுமக்களுடைய பக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் மற்றும் லஞ்சம் நடைபெறுகின்றது பிரியங்கா காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

image

பிரியங்கா காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி, “இதே குற்றச்சாட்டை நாங்கள் கடந்த ஜூன் மாதமே முன் வைத்தோம். கோயில் நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றது” எனக் கூறியுள்ளது. அம்மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியும் இந்த விவகாரத்தில் ஆளும் பாஜக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கோயில் நிர்வாகத்தின் செயலாளர், “அயோத்தியாவில் கோயில் கட்டுவதற்கு முன்பாகவே நிலங்களை விற்பதற்கான ஒப்பந்தங்கள் யாவும் அப்பொழுது இருந்த சந்தை மதிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. கோயில் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்ட உடன், சந்தை மதிப்பு கூடி விட்டது. அதுதான் இந்த விலை மாற்றத்திற்கான காரணம்” என விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் உத்தர பிரதேச தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தை தேர்தல் பரப்புரைகளில் மிக தீவிரமாக முன்னெடுக்க காங்கிரஸ் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pmjSjO
via Read tamil news blog

Post a Comment

0 Comments