Advertisement

Responsive Advertisement

’சமாஜ்வாதி உணவகத்தில் ரூ.10-க்கு சாப்பாடு; 22 லட்சம் பேருக்கு ஐ.டி. வேலை’ - அகிலேஷ் அதிரடி

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் குறைந்த விலையில் பசியாறும் விதத்தில் சமாஜ்வாதி உணவகத்தின் மூலம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதியளித்துள்ளார்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. அதேவேளை, பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், காசியாபாத்தில் இன்று ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ் “உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அறிவிப்பதற்கு முன், சமாஜ்வாதி கட்சி சில விஷயங்களை பொதுதளத்தில் வைக்க விரும்புகிறது. சமாஜ்வாதி கட்சி, ஏற்கனவே வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு பாசனங்களுக்காக இலவச மின்சாரம், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவவை ஏற்கனவே வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்தப் பிறகு, சமாஜ்வாதி கேன்டீன்கள் மற்றும் சமாஜ்வாதி கிரானா (அத்தியாவசிய) கடைகள் நிறுவப்படும். அந்தக் கடை மூலம் ஏழைகளுக்கு மானிய விலையில் ரேஷன் மற்றும் இதரப் பொருட்கள் கிடைக்கும் என்பதை நாங்கள் அறிவிக்க விரும்புகிறோம். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று டாக்டர் லோஹியா ஒருமுறை கூறியதால் இதைச் சொல்கிறேன். 10 ரூபாய்க்கு இந்த கேன்டீன்களில் கொடுக்கப்படும் சமாஜ்வாதி தாலியில் சத்தான உணவுகளை வழங்குவோம். இதன் மூலம் யாரும் பட்டினி கிடக்க மாட்டார்கள். இந்த கேன்டீன்களை நாங்கள் முன்பே சில இடங்களில் தொடங்கினோம். ஆனால் பா.ஜ.க. அரசு அவற்றை மூடிவிட்டது.

image

நகர்புறங்களுக்கு வேலைக்காக நிறைய பேர் வருகிறார்கள். எனவே அத்தகையவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA)வழியில், நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று நான் முன்பே கூறியிருந்தேன். மேலும், 11 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை தகுதிகேற்றவாறு முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவோம்” இவ்வாறு கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி நிறுத்தியுள்ளதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், “பா.ஜ.க.வும் இதுவரை 82 கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது” என்றார். “மத்திய இணை அமைச்சரின் மகன், விவசாயிகளை கொலை செய்யததாக குற்றஞ்சாட்டப்பட்ட கிரிமினல் பின்னணி கொண்ட அந்தக் கட்சி முதலில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சமாஜ்வாதியால் நிறுத்தப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தால் பொய்யாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://bit.ly/32KKxyk
via Read tamil news blog

Post a Comment

0 Comments