Advertisement

Responsive Advertisement

“மூன்று பேர்..மூன்று காரணங்கள்” பத்ம விருதுகளை புறக்கணித்த சீனியர் பெங்காளிகள்: ஓர் பார்வை

மத்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்ம விருதுகளை திருப்பி அளிப்பதாக, மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் 3 பேர் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு, கலை, வணிகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு 128 பேர், பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் பத்ம விபூஷண் விருதுக்கு 4 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

image

அந்தவகையில், விமான விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு, மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியான நிலையில், பத்ம பூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை ஏற்க மறுத்துள்ளார். தனக்கு பத்ம பூஷண் விருது வழங்குவது குறித்து தன்னிடம் யாரும் கூறவில்லை என்றும், ஆனால் தனக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதைத் துறப்பதாகவும் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

image

கம்யூனிஸ்ட கட்சியைச் சேர்ந்த புத்ததேவ் பட்டாச்சாரியா, அரசியலில் கடுமையான போக்கை கடைப் பிடிப்பவராகவும், பல நேரங்களில் மோடி அரசை கடுமையாக எதிர்த்தவராகவும் இருந்து வருகிறார். காவி அரசியல் முகாமுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உயர்மட்ட அமைப்பிலும் பதவி வகித்து உள்ளதோடு, மேற்குவங்கத்தில் முதல்வராகவும் இருந்துள்ளார்.

இவரை அடுத்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த, 90 வயதான பிரபல பின்னணி பாடகி சந்தியா முகோபாத்யாயும், நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார். உரிய நேரத்தில் வழங்கப்படாமல், வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மரியாதை கிடைத்ததால், அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜூனியர் ஆர்டிஸ்ட், அதாவது இளைய கலைஞருக்கு வேண்டுமென்றால், பத்ம ஸ்ரீ விருது பொருந்தும் என்றும், 80 ஆண்டுகளாக பாடி வரும் தன்னைப் போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ விருது வழங்குவது உரிய அந்தஸ்தாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

image

சந்தியா முகோபாத்யா முகர்ஜியின் மகள் சௌமி சென்குப்தா கூறுகையில், “டெல்லியில் இருந்து விருதுக்கான அழைப்பு வந்தபோது, தனது தாயார் மூத்த அதிகாரியிடம், தனது வயதில் விருது வழங்கப்பட்டதை ‘அவமானமாக’ உணர்ந்ததாக கூறியதாக” அவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான சந்தியா முகோபாத்யாய், அம்மாநிலத்தின் உயரிய விருதான "பங்கா பிபூஷன்" விருதை 2011-ல் பெற்றுள்ளார். இந்த விருதுகள், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியால் அந்த ஆண்டு நிறுவப்பட்டு, சந்தியா முகோபாத்யாய்.-க்கு வழங்கப்பட்டது. மேலும் 1970-ம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதையும் சந்தியா முகோபாத்யாய் பெற்றுள்ளார்.

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இருவர் பத்ம விருதை புறக்கணித்த நிலையில், 67 வயதான பிரபல தாள வாத்தியக் கலைஞர் பண்டிட் அனிந்த்யா சாட்டர்ஜியும் பத்ம விருதை புறக்கணித்துள்ளார். பண்டிட் ரவிசங்கர், உஸ்தாத் அம்ஜத் அலிகான் மற்றும் உஸ்தாத் அலி அக்பர் கான் போன்ற பண்டிதர்கள் வரிசையில் வந்த பண்டிட் அனிந்த்யா சாட்டர்ஜியும் பத்ம விருதை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. பண்டிட் ஞான் பிரகாஷ் கோஷின் சீடரான இவர், கடந்த காலங்களில் ராஷ்டிரபதி பவனில், தாள வாத்திய இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். மேலும், கடந்த 1989-ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமன்றத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில், இளைய இசைக்கலைஞராக பங்கேற்றவர் பண்டிட் அனிந்த்யா சாட்டர்ஜி.

image

டெல்லியில் இருந்து பத்ம விருது குறித்து தனது சம்மதம் கோரி தொலைபேசி அழைப்பு வந்தபோது, எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்காமல் நாசூக்காக விருதை புறக்கணித்ததாகக் பண்டிட் அனிந்த்யா சாட்டர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் நன்றி சொன்னேன். பின்பு நான் பணிவுடன் விருதை மறுத்துவிட்டேன்.  ஆனால் எனது இசைத் தொழில் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில்இ பத்மஸ்ரீ பெற நான் தயாராக இல்லை. அந்த கட்டத்தை நான் கடந்துவிட்டேன்" என்று 2002-ல் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற தாள வாத்தியக் கலைஞரான பண்டிட் அனிந்த்யா சாட்டர்ஜி கூறியுள்ளார்.

பத்ம விருதுகள் அறிவிப்புக்குப் பிறகு பொதுவாக அந்த விருது பெறுபவர்கள் மறுப்பது மிகவும் அரிதான நிகழ்வே. விருது வழங்கும் நெறிமுறையின் கீழ், விருது பெறுபவர்களுக்கு விருதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே பட்டியல் அறிவிக்கப்படும். அதன்பின்பு குடியரசுத் தலைவர் மாளிகையில், மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில், குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு, விருது பெறுபவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். 

கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க. தோல்வியை சந்தித்தநிலையில், தற்போது அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூவர் பத்ம விருதுகளை துறந்துள்ளது, ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் உயர்ந்த விருதுகளில் முதன்மையான விருதாக பாரத ரத்னா விருதும், அடுத்தப்படியாக பத்ம விபூஷணும், அதற்கு அடுத்த நிலையில் பத்ம பூஷண் விருதும், கடைசியாக பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Hb9JNy
via Read tamil news blog

Post a Comment

0 Comments