Advertisement

Responsive Advertisement

வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கும் காங்கிரஸ் தலைவர்கள்

தேர்தல் என்றாலே ஏராளமான சுவாரஸ்யங்கள் அரங்கேறும். கோவாவிலும் மணிப்பூரிலும் வழிபாட்டுத் தலங்களில் வைத்து வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்குகிறது ஒரு கட்சி.

தேர்தல் அறிவித்ததில் இருந்து புதிய ஆட்சி அமையும் வரை அடுத்தடுத்து கலகலப்பான காட்சிகளைப் பார்க்க முடியும். அவற்றில் எம்எல்ஏக்கள் கட்சித் தாவுவது என்பது, எதிர்பாராத, அதிரடியான திருப்பங்களாக இருக்கும். கட்சித்தாவல் என்ற ஒரு விஷயத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்கும். மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, கோவா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்கள் என ஏராளமான மாநிலங்களில் ஆட்சியை அமைத்த பின்னும், எம்எல்ஏக்கள் கட்சித் தாவியதால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போனது.

image

2014-ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 17 எம்எல்ஏக்களில் 15 பேர் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர். இதுபோன்ற சூழல் இனியும் ஏற்படாமல் தடுக்க புதிய யோசனையைப் பின்பற்றி வருகிறது கோவா மாநில காங்கிரஸ். தங்கள் வேட்பாளர்களை அவரவர் வழிபாட்டுத் தலத்துக்கு அழைத்துச் சென்று கடவுளின் பெயரால் 'விசுவாசத்தின் உறுதிமொழி' என்று சத்தியம் வாங்குகிறது. தேர்தலுக்குப் பிறகு கட்சி தாவ மாட்டேன் என கடவுளின் மீது ஆணையாக சத்தியம் வாங்கி வருகிறது.

இதேபோல மணிப்பூர் மாநிலத்திலும் தங்கள் வேட்பாளர்களை வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று சத்தியம் வாங்குகின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள். காரணம் மணிப்பூரில் 2017-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், கடந்த 5 ஆண்டுகளில் 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

அந்த பாதிப்பைத் தடுக்கவே சத்தியம் வாங்குவதாக, மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் தேவ்பர்தா சிங் கூறுகிறார். ஏதாவது ஒரு கட்டத்தில் தங்கள் எம்எல்ஏக்கள் கட்சி தாவுவது நின்று போகும் என நம்புவதாக அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். இதனை கவனித்து வரும் பாரதிய ஜனதா கட்சியும் கட்சித் தாவலைத் தடுக்க ஒரு யோசனை முன்னெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வெற்றி பெற்ற பிறகு கட்சித் தாவ மாட்டேன் என தங்கள் வேட்பாளர்களிடம் உறுதி கேட்டு கையொப்பம் பெற திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை போலவே சத்தியம் வாங்கலாமா என்று யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g6i6Ou
via Read tamil news blog

Post a Comment

0 Comments