Advertisement

Responsive Advertisement

‘27 பெண்களை ஏமாற்றி திருமணம்’ 54 வயது மோசடி மன்னன் - விசாரணையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஒடிசாவை சேர்ந்த 54 வயது கல்யாண மோசடி மன்னனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 42 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், தனது கணவன் பிபு பிரகாஷ் ஸ்வைன் தன்னிடம் இருந்து பணம், நகைகளை எடுத்துச் சென்றுவிட்டு திரும்பி வரவில்லை எனக் கூறியிருந்தார். இதன்பேரில் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றிருப்பதும், மணமகனுக்கு 54 வயது என்பதும் தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் தனது கணவரை பெங்களூர் மருத்துவக் கல்வித்துறை அதிகாரி எனவும் கூறியிருந்தார்.

image

இதையடுத்து, பெங்களூரு போலீஸார் உதவியுடன் இதுதொடர்பாக விசாரித்த போது, அம்மநில மருத்துவக் கல்வித்துறையில் அப்படி யாரும் பணிபுரியவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 8 மாதக்கால தேடுதல் வேட்டைக்கு பின்னர், பிபு பிரகாஷை போலீஸார் புவனேஸ்வரில் நேற்று கைது செய்தனர்.

image

ஏதோ ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பார் என நினைத்து விசாரணையை தொடங்கிய போலீஸாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை மணந்திருப்பதும், அவர்களிடம் இருந்து பல லட்சக்கணக்கான பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு தலைமறைவானதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அவர் திருமணம் செய்தது சாதாரண பெண்களை அல்ல. இந்தோ - திபெத் காவல் அதிகாரி தொடங்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வரை அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறது. இவ்வளவு படித்த, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பெண்களை அவர் எப்படி ஏமாற்றி திருமணம் செய்தார் என்பது தான் சுவாரசியமான கதை என போலீஸார் கூறுகின்றனர்.

இதுகுறித்து புவனேஸ்வர் காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "5.2 அடி உயரத்துடன் பார்ப்பதற்கு மிகவும் சுமாராக இருக்கும் பிபு பிரகாஷ், பெரும்பாலும் 40 வயதை கடந்த திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்ற பெண்களை தான் மேட்ரிமோனி தளங்களின் மூலமாக குறி வைத்திருக்கிறார். தன்னை அரசுத் துறை உயரதிகாரியாகவும், மாதம் ரூ.70 லட்சம் சம்பளம் பெறுவதாகவும் அறிமுகப்படுத்தி, அந்தப் பெண்களை தனது சதிவலையில் சிக்க வைத்துள்ளார். இவ்வாறு அந்தப் பெண்களை திருமணம் செய்து பெங்களூரு, டெல்லி, புவனேஸ்வர் ஆகிய இடங்களில் வாடகை வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர்களிடம் இருந்த பணம், நகைகளை திருடிவிட்டு தலைமறைமாகி விடுவதுதான் பிபு பிரகாஷின் வேலையாக இருந்திருக்கிறது.

image

இதுபோல ஒடிசா, டெல்லி, கர்நாடாகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை கடந்த 4 ஆண்டுகளில் திருமணம் செய்து ரூ.10 லட்சம் ரொக்கம், சுமார் 5 லட்சம் மதிப்பிலான நகைகளை பிபு பிரகாஷ் மோசடி செய்திருக்கிறார்.

image

இவரால் ஏமாற்றப்பட்ட மற்ற பெண்கள் தங்கள் சமூக அந்தஸ்தை கருத்தில்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்திருக்கின்றனர். ஆனால், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் மட்டுமே துணிச்சலுடன் புகார் அளித்துள்ளார். அதனால் தான், இந்த மோசடி நபரை கைது செய்ய முடிந்திருக்கிறது" என அந்த அதிகாரி கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/p54hImk
via Read tamil news blog

Post a Comment

0 Comments