Advertisement

Responsive Advertisement

இலக்கை எட்டியதா மகளிர் தினம்? அதிகாரத்துக்கு வந்துவிட்டனரா பெண்கள்? - ஓர் பார்வை

பெண்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு சமூகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை நான் அளவிடுவேன் என அம்பேத்கர் கூறினார். அந்த வகையில் பல்துறைகளில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இதில் பார்க்கலாம். 

>அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள நிர்வாகம் சார்ந்த வேலைகளில் பெண்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். 

>கடைநிலை ஊழியராக இருப்பவர்களில் பெண்கள் கிட்டத்தட்ட 50 %; உயர் பதவி வகிப்பவர்கள் 20% மட்டுமே. 

>செவிலியர்கள், ஆசிரியர்கள் பணியிலும் பெண்களின் பங்கு மிக அதிகம். 

>செவிலியர்கள், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களில் 90- 95% பெண்கள். 

>ஆசிரியர் பணியிடங்களில் 60 - 70% வரை பெண்கள். 

>மருத்துவர்களாக இருப்பவர்களில் 50% மேற்பட்டோர் பெண்கள். 

>பொதுப்பணித்துறை, கட்டுமானம், நெடுஞ்சாலை துறை போன்ற களப்பணிகள் பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

ராணுவத்தில் பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பாதுகாப்புத் துறையில் பெண்களுக்கான பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனாலும் ராணுவத்தின் எந்தப் பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற முடியும் எனும் அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தலையிடவில்லை.

பெரு நிறுவன தலைமை பொறுப்பில் பெண்களை ஈடுபடுத்துமாறு அரசு வலியுறுத்தினாலும் இதற்கான வரைமுறைகள் ஏதுமில்லை. அரசு நிறுவனங்களில் பெண்களுக்கான 30% இட ஒதுக்கீடு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அமலானது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் பெண்களுக்காக இது போன்ற இட ஒதுக்கீடு இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

பாலின சமத்துவத்தை உறுதிசெய்வதில் தமிழ்நாட்டுக்கான இடம் குறித்து பார்க்கலாம். 

உலகளாவிய பாலினச் சமத்துவமின்மைக் குறியீடுகள்-2020 அறிக்கையில் சரிவை சந்தித்த இந்தியா. 2018-ல் 108-வது இடத்தில் இருந்த இந்தியா, 4 புள்ளிகள் கீழிறங்கி, 112-வது இடத்துக்குத் தாழ்ந்திருக்கிறது. இந்தியா-16% அளவுக்கு எழுத்தறிவில் இடைவெளி பெற்றுள்ளது. தமிழ்நாடு- 13 % அளவுக்கு எழுத்தறிவில் இடைவெளி கொண்டுள்ளது. கிராமங்களில் பெண்களுக்கு குறைந்த ஊதியம். பாலின ஊதிய வேறுபாடு கிராமப்புறங்களில் களையப்படவில்லை. மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பங்கேற்ற 50,000 வேட்பாளர்களில் வெறும் 8% மட்டுமே பெண்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்திலும் மொத்தமுள்ள 62 நீதிபதிகளில் ஐந்தில் 1 பங்குக்கும் குறைவான பெண் நீதிபதிகளே உள்ளனர். 

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து, வேளாண், காவல், நீதி என பல துறைகளில் தமிழகத்தில் பெண்கள் சிறகடித்து பறக்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஆனால் பாலின சமத்துவம் குறித்த கேள்விகள் எழாமல் இல்லை இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான கருப்பொருளும் அதுதான்.

வாய்ப்புகளையும், வள ஆதாரங்களையும் பெறுவதில் பெண்களுக்கு உள்ள சமத்துவ நிலையை மதிப்பிடுவதே, ஒரு நாடு தனது குடிமக்களை முன்னேற்றுவதில் எவ்வளவு உறுதியோடு இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறையாகும்.

சமீபத்தில் வெளிவந்த உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலினச் சமத்துவமின்மைக் குறியீடுகள்-2020 அறிக்கையைப் ஒப்பிடுகையில், உலக நாடுகள் உண்மையிலேயே பெண்கள் முன்னேற்றத்திற்கு அக்கறை காட்டுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.

2018-ல் 108-வது இடத்தில் இருந்த இந்தியா, நான்கு புள்ளிகள் கீழிறங்கி, 112-வது இடத்துக்குத் தாழ்ந்திருக்கிறது. இந்தக் குறியீடுகள் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வியறிவு நிலை, சுகாதாரம், அரசியலில் அதிகாரம் பெறுதல் ஆகிய நான்கு முக்கியத் துறைகளில் உள்ள பாலின அடிப்படையிலான இடைவெளிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி பெண்களின் எழுத்தறிவு இடைவெளி 13% ஆக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கு இந்த இடைவெளி சற்று அதிகரித்து 16% ஆக இருந்தது. கிராமப்புற கூலி வேலைகளுக்கு குறைந்த ஊதியத்திற்கு பெரும்பாலும் பெண்களே தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்தறிவில் முன்னேற்றம் இருந்தாலும் பாலின ஊதிய வேறுபாடு கிராமப்புறங்களில் இன்னும் களையப்படாமல் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பங்கேற்ற 50,000 வேட்பாளர்களில் வெறும் 8% மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகள் 50% அதிக இடம் ஒதுக்கப்பட்டது. சென்னையில் மேயரும் பெண்தான். 

சென்னை உயர்நீதிமன்றத்திலும் மொத்தமுள்ள 62 நீதிபதிகளில் ஐந்தில் 1 பங்குக்கும் குறைவான பெண் நீதிபதிகளே இருப்பதாக இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்திருந்தார். இவ்வாறு பாலின சமத்துவம் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் முன்னேற்றம் கண்டாலும் கிராமப்புற அடித்தட்டு பெண்களுக்காக எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்வதும் அவசியமானது. 

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த பல போராட்டங்களில் மிக முக்கியமானவை பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் தான். பெண் முன்னேற்றம் என்பது கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழக பெண்களுக்கு சமூக நீதியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கல்வியறிவில் தமிழகமே முன்னோடியாக திகழ்கிறது. அதுவும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி கற்கின்றனர். ஆனால், படித்த பல பெண்கள் மீண்டும் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கின்றனர். அவர்களுடைய முன்னேற்றத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண திட்டமும், பெண்களுக்கு 33 விழுக்காடு முன்னுரிமை கொடுக்கும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் பெண் பட்டதாரிக்கு சலுகை, அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தியது என பல்வேறு சலுகைகளும், சட்டங்களும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வந்ததை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பார்க்க முடிந்தது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/8ZPNjTL
via Read tamil news blog

Post a Comment

0 Comments