Advertisement

Responsive Advertisement

நாட்டுக்காக உயிரையும் விட தயார் - அர்விந்த் கெஜ்ரிவால்

தனது வீட்டுக்குள் பாஜகவினர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, நாட்டுக்காக உயிரையும் விட தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோல, டெல்லியிலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், "அந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிப்பதற்கு பதிலாக, யூடியுபில் இலவசமாக ஒளிபரப்பலாமே" என கிண்டலான தொனியில் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த பேச்சு, காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட இந்து பண்டிட் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

அப்போது அவர்களில் சிலர், கெஜ்ரிவாலின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அதிகாரிகளின் அறை ஆகியவற்றையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். இதனை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர். இது டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, பாஜகவினரின் இந்த செயலானது, அர்விந்த் கெஜ்ரிவாலை கொலை செய்யும் முயற்சி என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ஆம் ஆத்மியை தேர்தல்களில் தோற்கடிக்க முடியாததால் விரக்தி அடைந்திருக்கும் பாஜக, கெஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சிக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பகிரங்கமாக தெரிவித்தார். இந்த சூழலில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

'உயிரை விட தயார்'

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "ஒரு மிகப்பெரிய கட்சி, அதுவும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டால், அது நாட்டு மக்களுக்கு தவறான விஷயத்தை பரப்பி வருகிறது என அர்த்தம். இதனை பார்க்கும் இளம் தலைமுறையினர், ஒரு பிரச்னையை கையாள வன்முறையே சிறந்த வழி என நினைத்துக் கொள்வார்கள். ஒரு நாடு இந்த பாதையில் செல்லக் கூடாது. அர்விந்த் கெஜ்ரிவாலின் உயிர் முக்கியம் அல்ல; ஆனால் நாடு முக்கியம். நாட்டுக்காக உயிரை விட நான் தயாராக இருக்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1aMjhU3
via Read tamil news blog

Post a Comment

0 Comments