Advertisement

Responsive Advertisement

பேனர், ஒலிப்பெருக்கி வைப்பதில் பிரச்னை.. ராஜஸ்தானில் இரு சமூகத்தினர் இடையே பயங்கர மோதல்!

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்டது ஏன் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக நேற்று இரவு திடீரென மோதல் வெடித்தது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் இணையதள சேவையை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். முன்னதாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஜலோரி கேட் சந்திப்பில் இந்துக்கொடியை அகற்றி இஸ்லாமிய கொடியை நிறுவுவதில் தகராறு தொடங்கியது. ஜலோரி வட்டம் அருகே பேனர் வைக்கப்பட்டு, ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது. தற்போது வெளியான தகவல்களின்படி, சுதந்திரப் போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீது கொடி ஏற்றப்பட்டு, ஜலோரியில் உள்ள வட்டத்தில் ரமலான் தொடர்பான பேனர் கட்டப்பட்டதை அடுத்து, ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோஷங்களை எழுப்ப தொடங்கினர்.

image

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடி மற்றும் பேனரை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மற்ற சமூகத்தினர் ஆத்திரமடைந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு சமூகத்தினரும் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதில் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று ஜோத்பூர் மோதல் சம்பவம் தொடர்பாக மாநில சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து டி.ஜி.பி.மற்றும் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தி சட்டம்-ஒழுங்கை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் வன்முறை நடைபெறாமல் இருப்பதற்கு ஜோத்பூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

image

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடையை மீறி கூட்டம் கூடினாலும், பேரணி உள்ளிட்டவைகளை மேற்கொண்டாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் அரசியல் பாதுகாப்பில் தான் நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடைபெறும் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ஜோத்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கொடி அணிவகுப்பு நடத்தப்படும். நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஒரு சில காவல்துறையினருக்கு லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜோத்பூர் போலீஸ் கமிஷனர் நவஜோதி கோகோய் தெரிவித்துள்ளார்.

image

இன்று இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என தான் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார். சமூக விரோதிகளை கடுமையாக கையாள வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாநிலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருப்பதற்காக உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் வன்முறை நடைபெற்று வரும் வேளையில் அதை கவனிக்காமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து விக்னேஷ்முத்து

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ezDlvmi
via Read tamil news blog

Post a Comment

0 Comments