Advertisement

Responsive Advertisement

பழைய சர்வாதிகாரியின் மகன் கைக்கு செல்கிறது பிலிப்பைன்ஸ்! அதிபர் தேர்தலில் அமோக வெற்றி

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் அந்நாட்டில் பழைய சர்வாதிகாரியாக இருந்த ஃபெர்டினாட் மார்க்கோஸின் மகன் போங்போங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸின் மகன் போங்போங் மார்க்கோஸ், தற்போதை துணை அதிபர் லெனி ரோபெர்டோ உட்பட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

image

இருந்தபோதிலும், போங்போங் மார்க்கோஸுக்கும், லெனி ரோபெர்ட்டோவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் லெனி ரோபெர்ட்டோ முன்னிலையில் இருந்து வந்த சூழலில், பிற்பகலுக்கு பிறகு காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறின. பெரும்பாலான இடங்களில் மார்க்கோஸின் கை ஓங்க தொடங்கியது.

இறுதியில், லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் போங்போங் மார்க்கோஸ் வெற்றி பெற்றார் என பிலிப்பைன்ஸ் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஓரிரு தினங்களில் அவர் புதிய அதிபராக பதவியேற்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் போராட்டம்

இந்நிலையில், மார்க்கோஸ் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒருதரப்பு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மார்க்கோஸின் தந்தை ஃபெர்டினாண்டின் கொடுங்கோல் ஆட்சி மீண்டும் பிலிப்பைன்ஸுக்கு வந்துவிடக் கூடாது என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

image

இந்தப் போராட்டங்களின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். பல போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. போராட்டக்காரர்களை கலைக்க ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வாதிகாரத்தால் வீழ்ந்த ஃபெர்டினாட் மார்க்கோஸ்...

பிலிப்பைன்ஸில் 1965 முதல் 1986-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஃபெர்டினாட் மார்க்கோஸ். பதவியேற்றது முதலாக அரசுக்கு எதிராக பேசுபவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் என அனைவரையும் ஒடுக்கினார்.

image

எதிர்க்கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளை கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளினார். தேர்தல்களை ரத்து செய்தார். ராணுவம், காவல்துறையின் கட்டுப்பாட்டை முழுவதுமாக தன்வசம் ஆக்கிக் கொண்ட ஃபெர்டினாட், தனக்கு பிடிக்காதவர்கள், எதிரணியில் இருப்பவர்கள் அனைவரையும் கொன்று குவித்தார். இந்த சூழலில், தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வந்ததால் வளமான நாடாக அறியப்பட்ட பிலிப்பனைஸ் 1980-களில் வறுமையிலும், வறட்சியிலும் வீழ்ந்தது. இதனால் அதிபர் ஃபெர்டினாட் மார்க்கோஸ் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் வெடித்தது.

இதனால் உயிர் பிழைப்பதற்காக 1986-ம் ஆண்டு குடும்பத்துடன் ஹவாலிக்கு சென்றார் ஃபெர்டினாட். பின்னர் அடுத்த மூன்றாண்டுகளிலேயே அவர் உயிரிழந்தார். நீண்ட வருடங்களாக ஹவாலியில் இருந்து வந்த ஃபெர்டினாடின் குடும்பத்தினர் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிலிப்பைன்ஸ் திரும்பினர். இந்த நிலையில்தான், ஃபெர்டினாட் மார்க்கோஸ் மகன் போங்போங் மார்க்கோஸ் பிலிப்பைன்ஸ் அதிபராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/5jb9B3d
via Read tamil news blog

Post a Comment

0 Comments