Advertisement

Responsive Advertisement

போருக்கு தயாராகிறதா சீனா? லடாக் எல்லையில் படை பலத்தை பல மடங்கு பெருக்கி அச்சுறுத்தல்

இந்தியாவின் லடாக் எல்லையில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு பெருக்கியுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் திடீரென ஊடுருவினர். இதையடுத்து அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு சீனப் படையினரின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், அதே ஆண்டு ஜூன் மாதம் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.

image

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. எனினும், இரு நாடுகளும் முன்னெடுத்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு போர் பதற்றம் நீங்கியது. இந்திய எல்லைக்குள் முகாமிட்டிருந்த சீன ராணுவ வீரர்களும் பல இடங்களில் இருந்து பின்வாங்கினர். ஆனால், அவர்கள் லடாக்கின் சில பகுதிகளில் இருந்து வெளியேற மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

படைகளை குவிக்கும் சீனா..

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்காக லடாக் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தனது ராணுவ பலத்தை சீனா பல மடங்கு பெருக்கியுள்ளதாக இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை லடாக் எல்லையில் 20,000 சீன ராணுவ வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி ராணுவத் தளவாடங்களையும் அதிக அளவில் சீனா குவித்துள்ளதாக ரா, ஐ.பி. ஆகிய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

image

மேலும், லடாக் எல்லையில் 100 கி.மீ. சுற்றளவில் ஏராளமான மாதிரி கிராமங்களையும் சீனா கட்டமைத்துள்ளது. அதேபோல, போர் வந்தால் உடனடியாக லடாக்குக்கு ராணுவத் தளவாடங்களை கொண்டு வரும் வகையில் சுரங்க சாலைகள், விமான ஓடு பாதைகளும் லடாக் எல்லையில் சீனா அமைத்துள்ளது. 50 கி.மீ. தூரம் வரை ஏவுகணைகளை வீசக்கூடிய ட்ரக் ரகத்திலான பீரங்கிகளும் எல்லையில் அதிக அளவில் கொண்டு வரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து, தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் நவீன ரக 'ஹெச்.க்யு 9' ரக ஏவுகணைகளும் அங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன. 100 முதல் 300 கி.மீ. தொலைவு வரை உள்ள வான் இலக்குகளை இந்த ஏவுகணைகள் தாக்கவல்லது ஆகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/u5mnZR4
via Read tamil news blog

Post a Comment

0 Comments