Advertisement

Responsive Advertisement

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து - உ.பி பாஜக நிர்வாகி கைது

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவதூறு கருத்தை தெரிவித்தார். இதேபோல, டெல்லி பாஜக நிர்வாகி நவீன் குமார் ஜிண்டாலும் நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவான வகையில் கருத்து கூறியிருந்தார். இந்த விவகாரம் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஈரான், குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை பூதாகரமானது. இதன் தொடர்ச்சியாக, நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

image

நவீன் குமார் ஜிண்டால் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச பாஜக இளைஞரணி நிர்வாகியாக உள்ள ஹரி ஸ்ரீவத்சவா என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இது மீண்டும் பெரும் புயலை கிளப்பியது. ஹரி ஸ்ரீவத்சவாவுக்கு பொதுவெளியிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, லக்னோ போலீஸார் ஹரி ஸ்ரீவத்சவாவை இன்று கைது செய்தனர்.

image

இதுகுறித்து கான்பூர் காவல் ஆணையர் விஜய் சிங் மீனா கூறுகையில், "ஹரி ஸ்ரீவத்சவாவின் ட்விட்டர் பதிவு ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்தது தெரியவந்ததால் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வகுப்புக் கலவரத்தை தூண்டும் விதமாக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசும் இந்த நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது" என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/iNRbdZz
via Read tamil news blog

Post a Comment

0 Comments