Advertisement

Responsive Advertisement

உ.பி.: பாஜக எம்.எல்.ஏ.வை மேடையிலேயே அறைந்தாரா விவசாயி? : வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏவின். தலையில், விவசாயி ஒருவர் மேடைக்கே சென்று அறைவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் விவசாயி தன்னை அடிக்கவில்லை அன்பாகத்தான் தடவினார் என்று எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளநிலையில், இதற்கான பிரசாரங்களை அனைத்துக் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கல்யாண் சிங் பிறந்த நாளை முன்னிட்டு, உன்னாவ் நகரில் ஒரு சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா என்பவரும் கலந்து கொண்டார். அவர் மேடையில் அமர்ந்து பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான விவசாயி கையில் கம்பு ஊன்றியபடி தட்டுத்தடுமாறி மேடைக்கு நடந்து வந்தார்.

எம்.எல்.ஏ.வின் அருகில் வந்த அவர், திடீரென பா.ஜ.க. எம்.எல்.ஏ பங்கஜ் குப்தாவின் தலையில் அறைந்தார். திடீரென அந்த முதியவர் வந்து அடித்ததால் பங்கஜ் குப்தா அதிர்ச்சியாகி விட்டார். உடனடியாக விரைந்து வந்த கட்சியினர், அந்த விவசாயியை மேடையிலிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ காட்சி வேகமாக வைரல் ஆனது.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அதில், “பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில், விவசாயி ஒருவர் எம்.எல்.ஏ.வை அறைந்துள்ளார். அவர் மீது விழுந்த அறை, எம்.எல்.ஏ. மீதான கோபத்தில் அல்ல, பா.ஜ.க. தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கை, ஆட்சிக்கு விழுந்த அடி” என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து உடனடியாக எம்.எல்.ஏ. குப்தா விளக்கம் அளித்தார். சம்பந்தப்பட்ட விவசாயியையும் தன்னுடன் அமர வைத்துக் கொண்டு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா கூறுகையில், “விவசாயி என்னை அடிக்கவில்லை. மகிழ்ச்சியாகத்தான், பாசமாகத்தான் கன்னத்தில் தட்டினார். அது அடித்தது போல தெரிந்து விட்டது” என்று விளக்கம் அளித்தார்.

image

விவசாயி கூறுகையில், “நான் அவரை அடிக்கவில்லை. அருகில் வந்து பேசத்தான் முயன்றேன். கன்னத்தைத் தடவிக் கொடுக்க முயன்றபோது அது தவறுதலாக கைப்பட்டு விட்டது. எம்.எல்.ஏ. எனக்கு மகன் போல” என்று சிரித்தபடி கூறினார். தொடர்ந்து எம்.எல்.ஏ .பேசுகையில், “எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலையே இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை. விவசாயி என்னை அடித்து விட்டதாக. இப்போது பேசிக் கொண்டுள்ளனர். இவர் எனக்கு அப்பா மாதிரி. இதேபோல என்னை முன்பும் கூட கன்னத்தில் இவர் தட்டியுள்ளார். இதெல்லாம் ஒரு பிரச்சினையா” என்று சிரித்தபடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3f5kd4C
via Read tamil news blog

Post a Comment

0 Comments