Advertisement

Responsive Advertisement

மரணத் தண்டனையை உறுதிசெய்த ஏமன் நீதிமன்றம் - கேரள செவிலியர் வழக்கில் நடந்தது என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷ பிரியா (33). செவிலியரான இவரும், இவரது கணவர் டாமி தாமஸ் என்பரும், ஏமனில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, கணவர் டாமி தாமஸின் சொந்த ஊரான கேரள மாநிலம் இடுக்கிக்கு, தங்களது மகளுடன் ஏமனில் இருந்து நிமிஷ பிரியா திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, செவிலியர் நிமிஷ பிரியா மட்டும் ஏமனுக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார். நிமிஷ பிரியாவின் கணவர் டாமி, மார்ச் மாதம் செல்ல இருந்தநிலையில், ஏமனில் நடந்த போர் காரணமாக விசா கிடைக்காமல், தனது பெண் குழந்தையுடன் இடுக்கியிலேயே தங்கி விட்டார்.

image

இந்நிலையில், ஏமனில் சொந்தமாக கிளினிக் வைப்பதற்காக, அந்நாட்டு விதிகளின்படி, ஏமன் நாட்டைச் சேர்ந்தவரும், தங்கள் குடும்பத்துடன் நன்கு பழகியவருமான தலால் அப்து மஹதியிடம் நிமிஷபிரியா உதவி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தலால் அப்து மஹதி அளித்த உதவியால் கிளினிக் வைத்துள்ளார் நிமிஷ பிரியா. அந்த கிளினிக்கில் நல்ல வருமானமும் வந்து கொண்டிருந்துள்ளது.

இதற்கிடையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிமிஷாவை வற்புறுத்தி வந்ததுடன், வருமானத்தை தலால் மட்டுமே எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தநிலையில், நிமிஷபிரியாவின் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு, அவரை உடல்ரீதியாக தலால் துன்புறுத்தியும் வந்துள்ளார்.

பலமுறை துப்பாக்கி முனையில் தலால் மிரட்டியுள்ளார். கிளினிக்கில் இருந்த பணத்தையும் நிமிஷபிரியாவின் ஆபரணங்களையும் தலால் எடுத்துக்கொண்டதாகக் தெரிகிறது. இதனால் சித்ரவதையை தாங்க முடியாமல் நிமிஷபிரியா போலீசில் புகார் செய்தார். அவர்கள் தலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து திரும்பியதும், நிமிஷபிரியா மீதான சித்திரவதையின் தீவிரம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

image

இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு, தன்னுடன் பணிபுரிந்த செவிலியர் ஹனானின் உதவியுடன் தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தி, அவரை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் நிமிஷபிரியா வீசியுள்ளார். பின்னர், நிமிஷபிரியா அங்கிருந்து தப்பித்து, 200 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனையில் செவிலியராக வேலை கிடைக்கவும், அங்கு சென்று பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், நிமிஷபிரியாவின் பழைய கிளினிக் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், அது தலாலின் உடல் என்றும், அவரை நிமிஷபிரியா கொலை செய்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

image

இந்த வழக்கில் கீழமை நிதிமன்றம் நிமிஷபிரியாவுக்கு மரண தண்டனையும், உதவி செய்த ஹனானுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட நிமிஷபிரியா, தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிமிஷபிரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நிமிஷபிரியாவின் மகளுக்கு தற்போது 7 வயது ஆகியுள்ளநிலையில், தனது தந்தையுடன் இடுக்கியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/5heoDF9
via Read tamil news blog

Post a Comment

0 Comments