Advertisement

Responsive Advertisement

5 நாள் மழைக்கே கரைந்து போன விரைவுச் சாலை - பிரதமரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது

ஐந்து நாள் மழையை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் உத்தரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த விரைவுச் சாலையில் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள பாரத்கூப் பகுதியையும், எட்டாவா மாவட்டத்தில் உள்ள குட்ரேல் பகுதியையும் இணைக்கும் வகையில் 296 கிலோமீட்டருக்கு மிகப்பெரிய நான்கு வழி புந்தேல்கண்ட் விரைவுச் சாலை (Express Way) அமைக்கப்பட்டது. ரூ.15,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ம் தேதி திறந்து வைத்தார்.

image

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையில் புதிதாக அமைக்கப்பட்ட விரைவுச் சாலையில் ஆங்காங்கே தார்கள் கரைந்து கூழாங்கற்கள் வெளியே வந்து பள்ளங்கள் விழுந்தன. குறிப்பாக, ஜலோன் மாவட்டத்தின் சிரியா சலீம்பூர் பகுதியில் செல்லும் அந்த விரைவுச் சாலையில் மிகப்பெரிய பள்ளமே ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சாலை மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

image

பாஜக எம்.பி. விமர்சனம்

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தியே கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரூ.15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட ஒரு சாலை, 5 நாள் மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போனால், அதன் தரம் குறித்து ஏராளமான கேள்விகள் எழும்புகின்றன. இத்தனை மோசமான தரத்தில் சாலையை அமைத்த திட்டத்தின் தலைவர், சம்பந்தப்பட்ட பொறியாளர், அதிகாரிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் குற்றச்சாட்டு

இதேபோல, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பெரிய மனிதர்களால் புந்தேல்கண்ட் விரைவுச் சாலை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திலேயே அதில் நடைபெற்ற ஊழல், பள்ளத்தில் இருந்து வெளியே வந்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/FD0rUBK
via Read tamil news blog

Post a Comment

0 Comments