Advertisement

Responsive Advertisement

சவால்விட்டு ஒரு மணி நேரத்தில் ரூ.10 லட்சத்துடன் வந்த விவசாயி; திகைத்த கார் விற்பனையாளர்கள்

கர்நாடகாவில் தனியார் கார் நிறுவனம் ஒன்றிற்க்கு சென்ற விவசாயியொருவர் உருவகேலிக்கு உள்ளாகியிருந்திருக்கிறார். தன்னை கேலி செய்தவர்களை வாயடைக்கவைக்க, திரைப்பட பாணியில் சவால் விட்டு சென்று ஒரு மணி நேர இடைவெளிக்குள் ரூ. 10 லட்ச ரூபாய் ரொக்கத்தை தயார் செய்து அதை கார் விற்பனையாளர்களிடம் கொடுத்து பழி வாங்கியுள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக காரை டெலிவரி செய்யும்படி கேட்டிருக்கிறார் அவர். இச்சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்தது என்ன?

கர்நாடகாவில் உள்ள அந்த கார் நிறுவனத்தின் பாலிரோ வாகனத்தின் ஷோரூமுக்கு அந்த விவசாயி சமீபத்தில் சென்றிருக்கிறார். அங்கு சென்று, வாகனங்களின் விலையை கேட்டறிய முயன்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சில விற்பனையாளர்கள், விவசாயியின் தோற்றத்தை பார்த்து ‘இதலாம் 10 லட்ச ரூபாய் மதிப்புமிக்க விலை உயர்ந்த கார்கள். உங்களால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியுமா?’ என்று நக்கலாக கேட்டு கேலி செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்குள்ளான அவ்விவசாயி, அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து காரின் விலையை முழு தொகையாக ரூ.10 லட்சத்தை கையில் கொண்டு வந்திருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்விற்பனையாளர்கள், தங்கள் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

image

கடந்த வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு நடந்திருக்கிறது. இக்காட்சியின் வீடியோ செய்திகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், கெம்பெகௌடா என்ற அவ்விவசாயியிடம் விற்பனையாளர் மரியாதை குறைவாக நடந்துக்கொண்டது, அங்கிருந்து அவ்விவசாயியை விரட்டியடித்தது போன்றவையாவும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக விற்பனையாளர் விவசாயியிடம் “இந்த கார், 10 லட்ச ரூபாய் மதிப்புமிக்கது. நிச்சயமா உங்க பாக்கெட்ல அவ்வளவு பெரிய தொகை இருக்காது” எனக்கூறி, விவசாயியின் உருவத்தை வைத்து அவரை கேலி செய்தது இருப்பதாக சொல்லப்படுகிறது. விவசாயியுடன், அவரது நண்பரும் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அரை மணி மணி நேரம் வரை நீடித்த இந்த வாக்குவாதம், இறுதியில் “நான் இந்த வாகனத்துக்கான பணத்தை, இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் கொடுத்துவிடுவேன். நான் பணத்தை கொடுத்தவுடன் இந்த காரை உடனடியாக டெலிவரி செய்ய வேண்டும். அதற்கு தேவையான ஏற்பாடுகளையெல்லாம் இப்போதே செய்துவையுங்கள்” என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

image

சொன்னதுபோலவே ஒரு மணி நேரத்துக்குள் பணத்துடன் விவசாயி திரும்பியதால், ஸ்தம்பித்துள்ளனர் விற்பனையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள். பின்னர் சற்று நிதானித்த அவர்கள், ‘முழு பணத்தையும் கொடுத்துவிட்டாலும்கூட, எங்களால் உடனடியாக டெலிவரி செய்ய இயலாது. இன்னும் 3 - 4 நாள்களில் வண்டியை டெலிவரி செய்கிறோம்’ என கூறியுள்ளனர். ஆனால் அதில் விவசாயிக்கு உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த அவர் ‘கடை ஊழியர்கள் அனைவரும் தங்களின் தவறான அணுகுமுறைக்கு, வாடிக்கையாளர்களாகிய எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தியுள்ளனர். இறுதியில் விவசாயி கெம்பெகௌடா, ஷோ ரூம் விற்பனையாளர்களிடம் “உங்களுடைய ஷோ ரூமில் கார் வாங்குவதில், எனக்கு விருப்பமில்லை. எனக்கு இந்த கார் வேண்டாம்” எனக்கூறி அங்கிருந்து தனது 10 லட்ச ரூபாய் ரொக்கத்துடன் புறப்பட்டு சென்றிருந்திருக்கிறார்.

இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில், பலருக்கும் ஆச்சரியத்தையும் கலகலப்பையும்கூட ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்தி: உ.பி: 4 கோடி வீடுகளில் தாமரை சின்னத்தை ஒட்டும் மிக பிரம்மாண்ட திட்டம்- பாஜக புதிய முயற்சி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33G3Fy2
via Read tamil news blog

Post a Comment

0 Comments