Advertisement

Responsive Advertisement

உ.பி: 4 கோடி வீடுகளில் தாமரை சின்னத்தை ஒட்டும் மிக பிரம்மாண்ட திட்டம்- பாஜக புதிய முயற்சி

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, 4 கோடி வீடுகளில் பா.ஜ.க.வின் சின்னமான தாமரை சின்னத்தை ஒட்டும் மிக பிரம்மாண்டமான திட்டத்தை, அக்கட்சி கையில் எடுத்துள்ளது.

403 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு, ஒருபுறம் சமாஜ்வாதி கட்சி, மற்றொருபுறம் காங்கிரஸ், இன்னொருபுறம் பகுஜன் சமாஜ் கட்சி என மூன்று பக்கமும் நெருக்கடி நிலவி வருகிறது. இந்தச் சூழலில், பீம் ஆர்மி உள்ளிட்ட சில சிறிய கட்சிகளும், பா.ஜ.க.விற்கு எதிராக தீவிரமாக மாறிவருகின்றது.

இதனால் வெற்றியை வசப்படுத்த, கட்டாயம் பெரிய அளவில் ஏதாவது செய்தாக வேண்டிய சூழல் அக்கட்சிக்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள், பாத யாத்திரை மற்றும் பேரணிகளை நடத்த, தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடை, அக்கட்சிக்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களை நடத்தி, அதன்மூலம் வாக்காளர்களை ஏற்கச் செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய வெற்றி சூத்திரமே இத்தகைய பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள்தான்.

image

இதனால், மாற்று முயற்சியை உடனடியாக செய்தாக வேண்டும் என்ற நிலையில், உத்தரப் பிரதேசத்தின் 12 கோடி வாக்காளர்களை நேரடியாக அணுகும் திட்டத்தை அக்கட்சி முன்னெடுத்துள்ளது. அதன்படி, எல்லோர் வீட்டிலும் பா.ஜ.க. என்ற பொருள்படும் ‘ஹர் கர் பிஜேபி’ என்ற திட்டத்தை அறிவித்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தை, 4 கோடிக்கும் அதிகமான வீடுகளில் ஒட்ட வேண்டும் மற்றும் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் வெற்றி திலகமிட்டு அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

ஏற்கெனவே உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில், இந்தத் திட்டத்தை தாங்களாகவே செயல்படுத்தி வருகின்றனர். வீடுகளுக்கு சென்று தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் முதல் நிலைத் தலைவர்கள் தொடங்கி, தொண்டர்கள் வரை அனைவரும் இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மண்டல அளவிலான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்த திட்டத்தினை தற்போது செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

image

ஐந்து பேர் கொண்ட சிறு சிறு குழுவாக, நூற்றுக்கணக்கில் அமைத்து மண்டல வாரியாக தொண்டர்கள் பிரிக்கப்பட்டு, இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழைகள் நிறைந்த குடிசைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த கட்சித் தலைமை உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்பொழுது வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க, 10 பேர் வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில், தேர்தலில் வெற்றி என்பது சுலபமாகக் கிடைக்கக் கூடிய விஷயம் என அக்கட்சியின் தொண்டர்கள் தீவிரமாக நம்புகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GY4fpa
via Read tamil news blog

Post a Comment

0 Comments